இன்று அதிகாலை கேரள மாநிலம் கண்ணூரில் ஆலப்புழா - கண்ணூர் அதிவிரைவு எக்ஸ்ப்ரஸ் ரயில் தீப்பிடித்து எரிந்தது. கண்ணூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ரயிலின் ஒரு பெட்டி முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.
தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தொடர்ந்து தீப்பிடித்த பெட்டி மற்ற பெட்டிகளிடம் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத நபர் ரயிலின் உள்ளே நுழைந்துள்ளார். இதன் பின்பே ரயில் தீப்பிடித்து எரிந்துள்ளது. தொடர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்று காவல்துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக ஏப்ரல் 2 ஆம் தேதி, கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு பயங்கரமான ரயில் எரிப்பு சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், ரயில்வே சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. ஆலப்புழா-கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் கோழிக்கோட்டில் எலத்தூர் அருகே உள்ள கோரபுழா பாலத்தில் வந்தபோது, ஷாருக் சைஃபி ரயிலுக்கு தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் 9 பேர் தீக்காயம் அடைந்தனர். தீயில் இருந்து தப்பிக்க முயன்ற மூவரும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் கூறியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.