ஆட்சியைப் பிடிப்பதற்காக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ க்கள் எட்டுப் பேரை பாஜகவினர் மானேசரில் உள்ள சொகுசுவிடுதி ஒன்றில் தக்கவைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது மத்தியப்பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![kamalnath about madhyapradesh political confusions](http://image.nakkheeran.in/cdn/farfuture/RYsyLTc3VWSWD9mLsSF4UshhHYpgb-LFe_U2Q1trFWQ/1583299680/sites/default/files/inline-images/zdfsbgvsxf_0.jpg)
மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் தங்களது ஆட்சியை கலைக்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக தலைவர்கள் பெரும் தொகையை காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தருவதாக பேரம் பேசி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டி இருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத், "தங்களுக்கு மிகப் பெரிய தொகையை கொடுப்பதாக பாஜக பேச்சுவார்த்தை நடத்துவதாக எங்களுடைய எம்எல்ஏக்கள் என்னிடம் புகாரளிக்கிறார்கள். உங்களுக்கு சும்மா கொடுத்தால் பணத்தை தாராளமாக வாங்கிக்கொள்ளுங்கள் என்று நான் அவர்களிடம் கூறினேன். மார்ச் 26 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றிபெறும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பாஜக இந்த சதியை செய்கிறது. ஆனால், ஆட்சியைக் குறித்த அச்சம் எங்களுக்கு இல்லை. பணப்பட்டுவாடா மூலம் காங்கிரஸ் கட்சியையும் ஆட்சியையும் பாஜகவினால் அசைக்க முடியாது" என தெரிவித்தார்.
இந்நிலையில் மாநில அரசைக் கவிழ்க்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மத்தியப்பிரதேச பாஜக தலைவர்கள் எட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஹரியானாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாக காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 231 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையில், காங்கிரசுக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், பாஜகவுக்கு 107 உள்ளன. பெரும்பான்மைக்கு 116 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு இன்னும் 9 எம்.எல்.ஏ க்கள் ஆதரவு இருந்தால் மத்தியப்பிரதேசத்தில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற சூழல் நிலவி வருகிறது.