Skip to main content

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா?; துணைநிலை ஆளுநரின் திடீர் உத்தரவால் அடுத்த சிக்கல்!

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
Deputy Governor order of the NIA investigation recommend to arvind kejriwal

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல்10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு தொடர்பாக, அமலாக்கத்துறை தங்களது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 3ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது  குறித்து பரிசீலனை நடத்தப்பட போகிறோம்’ எனத் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை இன்று (07-05-24) தேதி ஒத்திவைத்தனர்.

இன்று நடைபெறும் இந்த வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்  கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில், கெஜ்ரிவாலுக்கு மேலும் ஒரு சிக்கல் வந்துள்ளது. 

உலக இந்து கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அஸ்ஸூ மோங்கியா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி துணைநிலை ஆளுநருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், ‘தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான, ‘சீக்கியர்களுக்கான நீதி’  அமைப்பிடம் இருந்து, கடந்த2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆம் ஆத்மி கட்சி ரூ.134 கோடி பணம் பெற்றுள்ளது. எனவே, இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலை என்.ஐ.ஏ விசாரணை நடத்த பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் புகாரின் அடிப்படையில், அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ விசாரணை நடத்த மத்திய உள்துறை செயலாளருக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனோ கடிதம் எழுதியுள்ளார். ஒருவேளை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட்டிருப்பது, டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவியில் உள்ள முதலமைச்சர் மீது என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைப்பது இதுவே முதல்முறையாகும்.

சார்ந்த செய்திகள்