தனது வீட்டில் கட்டிட வேலை செய்த சிலரின் உணவு பழக்கத்தை வைத்து அவர்கள் வங்கதேசத்தவர்கள் என கண்டறிந்தேன் என பாஜக மூத்த தலைவரான விஜய் வர்கியா பேசியது சர்ச்சையாகியுள்ளது.
பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரான விஜய் வர்கியா, இந்தூரில் நடைபெற்ற சிஏஏ ஆதரவு பேரணி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த பேரணியில் பேசிய அவர், "மேற்குங்க மாநிலத்திலிருந்து சிலர் எங்கள் வீட்டில் வேலை செய்ய வந்தனர். அவர்கள் வங்க மொழியில் பேசிக்கொள்ளுவார்கள். அவர்களுக்கு இந்தியும் தெரியவில்லை. ஆனால் அப்போதும் அவர்கள் மீது எனக்கு சந்தேகம் எழவில்லை. ஆனால், அவர்கள் சாப்பிட்ட உணவு முறையும் வித்தியாசமானதாக இருந்தது.
அவர்கள் போஹா (அவல் உணவு) மட்டுமே அதிகமாக சாப்பிட்டனர். அதைப் பார்த்து சந்தேகம் அடைந்த நான் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்களால் பதிலளிக்க முடியாமல் ஏதேதோ கூறி சமாளித்தனர். அதனையடுத்து தீவிரமாக விசாரித்தில் அவர்கள் வங்கதேசதத்தைச சேர்ந்தவர்கள் என்றும், பல ஆண்டுகளாக அவர்கள் இந்தியாவில் ரகசியமாக தங்கியிருப்பதையும் தெரிந்து கொண்டேன்.’’ எனப் பேசினார். அவரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது. இந்தியாவில் உள்ளவர்கள் யாரும் அவல் சாப்பிடுவது இல்லையா எனவும், இல்லையென்றால் அவல் சாப்பிடுகிறவர்கள் அனைவரும் இந்தியர்கள் இல்லையா..? எனவும் சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.