மத்தியப் பிரதேச மாநிலத்தின் கட்னி மாவட்ட பாஜக தலைவர் ராம்ரதன் பயல். இவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் பெட்ரோல் - டீசல் விலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ராம்ரதன் பயல் அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளித்த ராம்ரதன் பயல், "தலிபானிடம் செல்லுங்கள். ஆப்கானிஸ்தானில் பெட்ரோல் லிட்டர் 50 ரூபாய்க்குத்தான் விற்கப்படுகிறது. இங்கு நமக்குப் பாதுகாப்பாவது இருக்கிறது. இந்தியா ஏற்கனவே இரண்டு கரோனா அலைகளை எதிர்கொண்டுள்ளது. மூன்றாவது அலை விரைவில் வரவிருக்கிறது" என கூறியுள்ளார்.
இது பெரும் சர்ச்சையாகிவருகிறது. சமூகவலைதளங்களில் ராம்ரதன் பயல் பேசும் வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டுவருகிறது. ஏற்கனவே பீகார் பாஜகவைச் சேர்ந்த ஹரி பூஷன் தாகூர் என்பவர், "இந்தியாவில் இருக்கப் பயப்படுபவர்கள் ஆப்கானிஸ்தானுக்குப் போகலாம். அங்கு பெட்ரோல் - டீசல் விலை கம்மிதான். அங்கு சென்று பார்த்தால்தான் இந்தியாவின் அருமை புரியும்" என தெரிவித்ததும் சர்ச்சையானது.
இதேபோல் திரிபுரா பாஜக எம்.எல்.ஏ, “திரிணாமூல் தலைவர்கள் மீது தலிபான் ஸ்டைலில் தாக்குதல் நடத்த வேண்டும்” என கூறியிருப்பதும் விமர்சிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.