நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் எம்.பி.யாக பொறுப்பு வகித்து வந்தார். இவர் இன்று (02-03-24) திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து, கவுதம் கம்பீர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் நான் கவனம் செலுத்துவதற்காக எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று பா.ஜ.க கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.