Skip to main content

ஓரு எழுத்துதான் மிஸ்... எச்டிஎஃப்சி வங்கியை ஏமாற்றிய கன்சல்டன்ஸி

Published on 01/11/2018 | Edited on 01/11/2018

அடக்கோ கன்சல்டன்ஸி (Adeco Consultancy) எனும் வேலை வாய்ப்பு மற்றும் ஆலோசனை நிறுவனம் போலியான ஆவணங்களை உருவாக்கி தன் நிறுவனத்தில் வேலைக்காக பதிந்து வைத்திருந்த நபர்களின் சம்மதத்துடன், தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியில் பணி அமர்த்தி இருக்கிறது. அடக்கோ கன்சல்டன்ஸி எனும் பெயரிலே மற்றொரு நிறுவனமும் உள்ளது. ஆனால் அது (Adeeco Consultancy), இவர்கள் ’e’ எனும் ஓர் எழுத்தை விட்டுவிட்டு, உச்சரிப்பில் அவர்கள் பெயரை போலவே வைத்துகொண்டு ஏமாற்றியிருக்கிறார்கள். 

 

aa

 

அடக்கோ கன்சல்டன்ஸி எனும் வேலை வாய்ப்பு பெற்றுதரும் நிறுவனத்தில் வேலைக்காக பதிவு செய்திருந்த சிலரின் தற்குறிப்புகளை (Resume) தேர்ந்தெடுத்து அவர்களின் சம்மதத்துடன் போலியாக, அவர்கள் இதற்குமுன் வேலை செய்தது போலவும், அதற்காக அவர்கள் சம்பளம் வாங்கியது போன்ற இரசீதுகளும் மற்றும் அவர்களுக்கான போலி சான்றிதழ்களையும் தயார்செய்து 68 பேரை எச்டிஎஃப்சி வங்கியில் பணியமர்த்திருக்கிறார்கள்.  

 

எப்படி தெரியவந்தது ?
 

இந்த வருடம் பிப்ரவரி மாதம் வங்கியில் பணிபுரியும் துணை மேலாளர் ஒருவரை குறுக்கு சோதனை செய்துள்ளனர், அப்போது அந்த அதிகாரி முறையான வழிமுறைகளை பின்பற்றி பணியில் சேரவில்லை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த அதிகாரியிடம் விசாரனை செய்தபோது அவர், அடக்கோ நிறுவனம் மூலமாக தான் பணியில் சேர்ந்ததாகவும், வங்கித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு அந்நிறுவனம் உதவியதாகவும், அதற்காக 60,000 ரூபாய் கட்டியதாகவும் ஒப்புக்கொண்டார்.

 

அதிர்ச்சித் தகவல் !
 

இந்த விஷயத்தை அறிந்ததும், அதே கன்சல்டன்ஸியில் இருந்து இன்னும் யாரெல்லாம் வந்திருக்கிறாரகள் என்று சோதனை செய்துள்ளனர். அதில் 68 பேர் அந்த கன்சல்டன்ஸியில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது, அதில் 51 பேர் எச்டிஎஃப்சி வங்கியிலே இன்னமும் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதைவிட மற்றோரு பேரதிர்ச்சி என்னவென்றால், வங்கி பணியில் சேருமுன் ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் அதற்கு எச்டிஎஃப்சி ஊழியர் ஒருவரே உடந்தையாக இருந்திருக்கிறார்.

 

வேலை தேடுவோரிடம் விளையாடும் கன்சல்டன்ஸி
 

முதலில் இந்த நிறுவனம் எச்டிஎஃப்சி வங்கியின் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக வகுப்புகள் எடுப்பதாகக் கூறி ஆட்களை சேர்க்கின்றன. அதற்கு அந்நிறுவனம் 25,000 முதல் 1,50,000 ரூபாய் வரை கட்டணம் வசுல் செய்கிறது.
 

பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு சிறிது காலங்கள் கழித்து பயிற்சி பெறுபவர்களிடம், கமிஷன் தொகையாய் குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் போலியான ஆவணங்களை தயார்படுத்தி வங்கிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களுக்கு வேலையும் வாங்கி தந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது அப்படி ஏமாற்றி பணியில் சேர்ந்தவர்கள் அவதிப்படுகிறார்கள். இன்னும் சில கன்சல்டன்ஸிகள் பணம் பெற்றுகொண்டு வேலை வாங்கிதராமல் ஏமாற்றுகிறது.

 

விவரம் அறிந்த எச்டிஎஃப்சி வங்கி, போலீஸில் புகார் அளித்துள்ளது. அதனை தொடர்ந்து, போலீஸ் அந்த கன்சல்டன்ஸியின் மீது ஏமாற்றுதல், மோசடி, ஏமாற்றுவதற்காக மோசடி செய்தது, போலி ஆவணங்களை பயன்படுத்தியது மற்றும் சதி குற்றம் ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளது.

 

படித்துவிட்டு பணிகாக வெவ்வேறு வலைதளத்திலும், கன்சல்டன்ஸிகளிலும் பதிந்துவிட்டு காத்திருக்கும் இளைய சமுதாயம், ஒரு இடத்தில் இருந்து வேலை கிடைக்கிறது என்பதால் எது வேண்டுமெனாலும் செய்யலாம் என்ற நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி இதுபோன்ற நிறுவனங்களும் அவர்களை அடிபணிய வைக்கிறது. இப்போது ஏமாற்றி வேலை வாங்கிவிடலாம். ஆனால் நிச்சயம் ஏதாவது ஓரிடத்தில் சிக்கி, அதன் பின் அவர்கள் வாழ்வில் பணிக்கே செல்ல முடியாத அளவிற்கு எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது. ஏமாற்றுபர்கள் நிறுத்தமாட்டார்கள் நாம்தான் அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும்.

 

சார்ந்த செய்திகள்