நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், ‘மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுகளை ரத்து செய்வோம்’ என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அந்த வீடியோவை தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அமித்ஷா பேசியதாக கூறப்படும் அந்த வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையினர் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ என்று கண்டறியப்பட்டது. மேலும், அந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அமித்ஷாவின் போலி வீடியோவை சமூக வலைதளங்களில் பகிரிந்ததாக கூறி தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், ரேவந்த் ரெட்டி பயன்படுத்திய அனைத்த் மின்னனு உபகரணங்களையும் மே 1ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் போது கொண்டு வர வேண்டும் என்றும் டெல்லி போலீசார் கூறியுள்ளது.
மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.