இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை மோசமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நாட்டில் தினசரி பாதிப்பு குறைந்துவருகிறது. இந்தநிலையில், நேற்று (20.05.2021) பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவின் 8 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும், ஒன்பது மாநிலங்களில் 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் பேரும், 19 மாநிலங்களில் 50 ஆயிரத்திற்கும் குறைவனோரும் கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. கரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது முக்கியமான ஒன்றாக கருதப்படும் நிலையில், 50 சதவீத இந்தியர்கள் முகக்கவசங்களை அணிவதில்லை என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
25 நகரங்களில் 2,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முகக்கவசம் அணியும் மீதமுள்ள 50 சதவீதத்தினரை மட்டும் தனியே எடுத்துக்கொண்டால், அதில் 64 சதவீதம் பேர் முகக்கவசங்களைக் கொண்டு வாயை மட்டும் மூடுவதாகவும், மூக்கை மூடுவதில்லை என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், 20 சதவீதம் பேர் வாய்க்கும் கீழே முகக்கவசத்தை அணிந்திருப்பதாகவும், 2 சதவீதம் பேர் தங்கள் கழுத்துக்களில் முகக்கவசம் அணிந்திருப்பதாகவும் கூறியுள்ளது. வெறும் 14 சதவீதம் பேரே முகக்கவசத்தை சரியாக அணிவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.