ஜம்மு& காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு&காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான மசோதாக்கள் அனைத்தும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவரும் ஒப்புதல் அளித்ததால், சட்டம் அமலாகும் தேதியை அறிவித்தது.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விளக்கம் அளித்தார். அதில் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்றும், மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் காஷ்மீர் மக்களுக்கு இனி சென்றடையும் என்றார். அதேபோல் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு ஸ்ரீநகரில் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
ஜம்மு& காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்பு முன் அந்த மாநிலம் முழுவதும் ராணுவப்படையை குவித்து பாதுகாப்பை பலப்படுத்தியது. மேலும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நீடித்தது. அதன் பிறகு நாளடைவில் சகஜ சூழலுக்கு காஷ்மீர் மாறியதால் பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், அரசு அலுவலகங்கள் இயங்க தொடங்கினர்.
இந்நிலையில் இன்று ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே ஜம்மு- காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை திடீரென சந்தித்தார். அப்போது காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் குறித்து ஆளுநரிடம், குடியரசுத்தலைவர் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.