குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட 10,000 பேரைச் சீன நிறுவனம் உளவு பார்த்ததாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளச் சிறப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஜென்ஹுவா நிறுவனம் ட்விட்டர், பேஸ்புக், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஐந்து முன்னாள் பிரதமர்கள், 40 முன்னாள், இந்நாள் முதல்வர்கள், 350 எம்.பி.க்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் இந்திய தலைவர்களை உளவு பார்த்ததாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு கடிதம் மூலம் பதிலளித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், "இந்தியத் தலைவர்களைச் சீன நிறுவனம் வேவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார். இந்த குழு ஒரு மாதகாலத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ஜென்ஹுவா டேட்டா இன்பர்மேஷன் டெக்னாலஜி கோ தனியார் நிறுவனமாகும். இணையத்தில் பகிரங்கமாக வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே அந்த நிறுவனம் திரட்டியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.