நீட் முறைகேடு சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு; நீட் தேர்வு குளறுபடிகள்; ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்துள்ளது என இப்படி தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் மனுக்களாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் விடுமுறைகால சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு இன்று பட்டியலிடப்பட்டு இருந்தது. அதன்படி இந்த வழக்குகளில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு குளறுபடிகள் நீட் தேர்வின் புனித தன்மையைச் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டதோடு நீட் தேர்வு தொடர்பான இந்த வழக்குகளின் அடுத்த விசாரணையை ஜூலை எட்டாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கில் ஆஜரான நீட் தேர்வுக்கு எதிரான தரப்பு வழக்கறிஞர்கள் நீட் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு ஆகிய காரணங்களால் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். இது சுமார் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எதிர்காலம் சம்பந்தப்பட்டது எனவே கவுன்சிலிங்கை நிறுத்தி வையுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிபதிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.