தமிழகத்தில் சுமார் 12,000 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் 'பாரத் நெட்' டெண்டரில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி, ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்துள்ளது மத்திய வர்த்தக அமைச்சகம்.
நாடு முழுவதும் சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை அதிவேக ஆப்டிகல் ஃபைபர் இணையச் சேவை மூலம் இணைப்பதற்காக மத்திய அரசு 'பாரத் நெட்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 6.25 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிலையில், இந்த டெண்டர் விடப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், முறைகேடு நடந்துள்ளது எனவும் குற்றச்சாட்டு எழுந்தன. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதையடுத்து, டெண்டர் விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி, தமிழகத்தில் 'பாரத் நெட்' திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் உள்ள முரண்களைக் களைந்து மீண்டும் டெண்டர் விட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.