இந்திய, சீன நாடுகளிடையேயான பதற்றம் ஓரளவு தணிந்தது மற்றும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை (ஜூன் 18) 'கிடுகிடு'வென எழுச்சி கண்டன.
ஏற்றத்தில் நிப்டி:
தேசிய பங்குச்சந்தையான நிப்டி 10,000 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 34,000 புள்ளிகளுக்கு மேலும் வர்த்தகம் ஆனது முதலீட்டாளர்களிடையே மீண்டும் உற்சாகத்தை ஏற்டுத்தி உள்ளது.
நிப்டி, நேற்று முன்தினம் (17/06/2020) 9881 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் 9,867.25 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. அதிகபட்சமாக 10,111.20 புள்ளிகள் வரை உச்சம் பெற்ற நிப்டி, வர்த்தக நேர முடிவில் 10,091 புள்ளிகளில் முடிவுற்றது. குறைந்தபட்சமாக 9,845 புள்ளிகள் வரை சரிந்தது. நேற்று (18/06/2020) ஒரே நாளில் நிப்டி 210.50 புள்ளிகள் உயர்வைக் கண்டிருந்தது.
தேசிய பங்குச்சந்தையில் வர்த்தக மதிப்பைக் கணக்கிட உதவும் 50 பங்குகளில் 40 பங்குகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்து இருந்தன. 10 பங்குகளின் மதிப்பு லேசாகச் சரிவைக் கண்டிருந்தன. நிப்டியில் பஜாஜ் பின்சர்வ் பங்குகள் அதிகபட்சமாக 8.22 சதவீதம் ஆதாயம் அளித்தது. கோல் இண்டியா 6.33 சதவீதம், பஜாஜ் பைனான்ஸ் 5.48 சதவீதம், ஸீ எண்டர்டெயின்மென்ட் 5.42 சதவீதம், வேதாந்தா 4.70 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. அதேநேரம், டி.சி.எஸ்., ஹிந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல், ஏஷியன் பெயின்ட், பஜாஜ் ஆட்டோ ஆகிய பங்குகள் லேசான வீழ்ச்சி அடைந்தன.
சென்செக்ஸ் 'கிடுகிடு':
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸில் இண்டெக்ஸ் நேற்று முன்தினம் (17/06/2020) 33,507.92 புள்ளிகளில் நிறைவு பெற்றிருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் முந்தைய நாளைக் காட்டிலும் சற்று குறைந்து 33,371.52 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. குறைந்தபட்ச புள்ளிகளும் இதே அளவில் இருந்து. எனினும், சீரான வேகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண்கள் உயர்ந்து கொண்டே இருந்தன. 34 ஆயிரம் புள்ளிகளைத் தொட்ட பின்னரும் சரிவடையாமல் நீண்ட நேரம் அதே நிலையில் வர்த்தகம் நடந்து கொண்டிருந்தது. இறுதியில், 34,276 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. அதாவது முந்தைய நாளைக் காட்டிலும் நேற்று (18/06/2020) ஒரே நாளில் சென்செக்ஸ் 700.13 புள்ளிகள் (2.09%) ஏற்றம் கண்டிருந்தன.
சென்செக்ஸில் வரையறுக்கப்பட்ட 30 பங்குகளில், 22 பங்குகள் ஏற்றத்திலும், 8 பங்குகள் சரிவிலும் வர்த்தகம் ஆயின. மும்பை பங்குச்சந்தையான பிஎஸ்இ-ல் பதிவு செய்துள்ள 2749 பங்குகளில் 1876 பங்குகள் நேற்று முதலீட்டாளர்களுக்கு ஓரளவு ஆதாயம் அளித்தன. 734 பங்குகளின் மதிப்பு சற்றே சரிந்தன. 139 பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை. பிஎஸ்இ&ல் 102 பங்குகள் 52 வார உச்சத்தைத் தொட்ட பிறகும், தொடர்ந்து ஏற்றத்தில் இருந்தது, முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகச்சந்தைகள் நிலவரம்:
அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக் லேசான சரிவைச் சந்தித்து. அதேநேரம், ஜெர்மனியன் டிஏஎக்ஸ், சீனாவின் ஷாங்காய், சிங்கப்பூரின் எஸ்.ஜி.எக்ஸ். நிப்டி ஆகிய பங்குசந்தைகள் ஓரளவு ஏற்றத்தில் இருந்தன.
இன்றும் உயரலாம்...
கரோனாவின் இரண்டாம்கட்ட அலையால் ஏற்பட்ட பொருளாதார சரிவு, பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள். எனினும், ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டதால் அதன் தாக்கம் அடுத்தடுத்த நாளிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரத்தின் கடைசி நாளான இன்று (ஜூன் 19) நிப்டி 10,110 முதல் 10,195 புள்ளிகள் வரை உயர வாய்ப்பு உள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.