ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (23.07.2021) தொடங்கியது.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அன்ட் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி வென்றுள்ளார் மீராபாய். ஒலிம்பிக் வரலாற்றில் பளு தூக்குதலில் இதுவரை இரண்டுமுறை இந்தியா பதக்கம் வென்றுள்ளது. 2000ஆம் ஆண்டு கர்ணம் மல்லேஸ்வரி சிட்டினியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பளு தூக்குதலில் வெண்கல பதக்கம் வென்ற நிலையில், இன்று மீராபாய் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.