தென் இந்தியாவின் பிரபலமான உணவுகளில் ஒன்றான பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு இணையவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், இதுகுறித்த ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.
கர்நாடகாவை சேர்ந்த தனியார் உணவு உற்பத்தி நிறுவனம் ஒன்றின் மனுவைத் தொடர்ந்து, கர்நாடகாவின் ‘Authority for Advance Ruling’ அலுவலகம் அளித்துள்ள புதிய விளக்கத்தில், ரொட்டி வகையில் பரோட்டா சேராது என்பதால் ரொட்டிக்கு விதிக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை பரோட்டாவிற்கு விதிக்கமுடியாது என தெரிவித்து, பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவித்தது. இதனையடுத்து அதிருப்தியடைந்த பரோட்டா பிரியர்கள் #HandsOffParotta என்ற ஹாஷ்டேகை பயன்படுத்தி, இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பரோட்டா குறித்த அவரது அந்த பதிவில், "இந்தக் காலக்கட்டத்தில் நாடு சந்திக்கும் அனைத்து சவால்களுடன் பரோட்டாவின் இருப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் நாம் கவலைபட வேண்டும் போல் தெரிகிறது. ஆனால் இருப்பதை வைத்து மாயம் செய்யும் இந்திய திறமைகளை வைத்துப் பார்க்கும்போது விரைவில் ‘பரொட்டிகள்’ என்ற புதிய உணவைத் தயார் செய்வார்கள் என்று நினைக்கிறன். ரொட்டியா, பரோட்டாவா என்ற கறார் வகைப்படுத்தலுக்கு அது சவாலாக விளங்கும்" என கூறியுள்ளார். அவரது இந்த ட்வீட் பல ஆதரவு கருத்துக்களையும் தற்போது பெற்று வருகிறது.