பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை. இதனையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் 10,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். இது குறித்து தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உளவுத்துறை எச்சரிக்கை அடுத்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், அந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையிலே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சுமார் 100 கம்பெனிகளை சேர்ந்த 10,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏற்கனவே சுமார் 65,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் இணையுள்ளதால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.