கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், தங்களது பாதுகாப்புக்காக மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருந்த சூழலில், இதன் ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 9 பேர் இதனால் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஏப்ரல் 15 வரையிலான அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக நேற்று இரவு பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள சூழலில், கரோனாவுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்திருந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில், கரோனாவைத் தடுக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தைப் பயன்படுத்தலாம் எனவும், கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் நோய்த்தடுப்புக்காகப் பரிந்துரைக்கப்படுவதாகவும் அறிவித்தது. மேலும், இதுகுறித்த சோதனைகள் நடந்துவரும் நிலையில், இந்த மருந்து இந்தியாவிடம் போதுமான அளவு கையிருப்பு இருப்பதை உறுதிசெய்யும் விதமாக இந்த மருந்தின் ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. ஏற்கனவே வென்டிலேட்டர்கள், சானிடைசர்கள், முக்கவசங்கள் மற்றும் பாதுகாப்பு ஆடைகள் போன்றவரை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.