Skip to main content

மாணவர்களுக்கு நிர்வாண தண்டனை! -இப்படியும் ஒரு கொடூர பள்ளி!

Published on 27/12/2018 | Edited on 28/12/2018
​punishment

 

இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் கையில்தான் இருக்கிறது என்பதை ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் எந்த அளவுக்குப் புரிந்து நடக்கின்றனர்? அவ்வப்போது இதுபோன்ற கேள்விகள் எழுகின்றன. ஏனென்றால், கண்டிப்பு என்ற பெயரில்,  பள்ளிகளில்  கசப்பான  சில சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. 
மாணவன் என்றால் மாண்+அவன் என்று பிரிக்கலாம். மாண் என்றால் பெருமை. மாணவன் என்றால் பெருமைக்குரியவன். அதாவது, மாண்புடையவன் என்று பொருள். இந்த மாணவர்கள் நம் தேசத்தில் எப்படி நடத்தப்படுகின்றனர்? காலதாமதமாக பள்ளிக்கு வரும் மாணவர்கள், வீட்டுப்பாடம் எழுதாத மாணவர்கள், நன்றாகப் படிக்காதவர்கள்.

 

வகுப்பு நேரத்தில் பேசிக்கொண்டிருப்பவர்கள், இதுபோன்ற சிறு தவறுகளைச் செய்யும் மாணவர்களை, வெயிலில் மணிக்கணக்கில் நிற்க வைக்கின்றனர்; பிரம்பால் அடிக்கின்றனர்; தரையில் முட்டி போடச் சொல்கின்றனர். இதைக்காட்டிலும் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன.   சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டு, மனரீதியாகவும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். எக்காரணம் கொண்டும் உளவியல் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தண்டனை அளிக்கக்கூடாது என்று சட்டமே வரையறுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மீறி, நம் நாட்டில் ஏதோ ஒரு மாநிலத்தில்,  எங்கோ ஒரு பள்ளியில், அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. 

 


ஆந்திர மாநிலம் - சித்தூர் மாவட்டம் - புங்கனூரில் உள்ள சைதன்யா பாரதி என்ற  தனியார் பள்ளி, மாணவர்களுக்கு அளித்த தண்டனை கொடுமையானது. பள்ளிக்குத் தாமதமாக வந்த ஐந்து மாணவர்களை, ஆடைகளைக் களையச் செய்து,  வகுப்பறைக்கு வெளியே, வெயிலில் நிற்க வைத்திருக்கின்றனர். அவர்களில் மூன்று மாணவர்களை முழுவதுமாக நிர்வாணப்படுத்தி உள்ளனர். இரு கைகளையும் தூக்கி நிற்கும்படி செய்திருக்கின்றனர். இந்தக் கொடுமையை, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட, ஆந்திர மாநிலம் பரபரப்பானது. இதுகுறித்து  அந்தப் பள்ளியில் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும்  கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருக்கும் நிலையில், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்