அண்மையில் தொடர்ச்சியாகவே குஜராத்தில் கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது மீண்டும் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் நான்கு பேரை கைது செய்திருப்பதாக குஜராத் பயங்கரவாத தடுப்பு படை அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் வைத்து நான்கு பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று அந்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களை வாங்குவதற்கு தங்களைத் தயார் படுத்திக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ரகசிய இடத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே அதிக அளவில் குஜராத்தில் கடல் மார்க்கமாக போதைப்பொருள்கள் கடத்தப்பட்டது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவங்களுக்கு மத்தியில் ஐஎஸ்எம்ஐ அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.