புதுச்சேரியில் செயல்பட்டு வந்த 'சண்டே மார்க்கெட்' இடமாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று கடற்கரை சாலைக்கு அருகே 'சண்டே மார்க்கெட்' போடப்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் ஆடைகள், வாட்ச், காலணிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் மிகக் குறைந்த விலைக்கு கிடைப்பதால், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். மேலும் புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
'சண்டே மார்க்கெட்' காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதால், 'சண்டே மார்க்கெட்'டை வேறு இடத்திற்கு மாற்ற புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'புதுச்சேரியில் மிகவும் பிரபலமான 'சண்டே மார்க்கெட்', மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இடவசதி இல்லாததால் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஏ.ஃஎப்.டி.மைதானத்தில் 'சண்டே மார்க்கெட்' செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், 'சண்டே மார்க்கெட்' நெருக்கமான பகுதி என்பதால் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கேள்விக் குறியாகும். இதனால் மார்க்கெட், மைதானத்திற்கு மாற்றப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.