கேரளா மாநிலம், பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி ஜிஷா(29). இவர், அங்குள்ள சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வந்தார். இந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா தனது வீட்டில் சடலமாக கிடந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கேரளா போலீசார், மாணவி ஜிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், மாணவி ஜிஷா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இந்தக் கொடூரச் சம்பவத்தின் போது, அங்கு தேர்தல் நடைபெற்று கொண்டிருந்தது. அதனால், குற்றவாளியைக் கண்டிபிடிக்க வேண்டும் என்று அங்கு போராட்டம் தீவிரமடைந்து வந்தது.
இதனையடுத்து, மாணவி ஜிஷாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததது அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் அமீர்-உல்-இஸ்லாம் என்பதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை கேரளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 8 ஆண்டுகள் கழித்து, இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி ஜிஷாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அமீர்-உல்-இஸ்லாமுக்கு அதிகபட்சமான மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.