Skip to main content

முதல்வர் பதவி விலகக்கோரி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் போராட்டம்!

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் திருபுவனை தொகுதியில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அங்காளன். பாஜக கூட்டணி ஆதரவு எம்.எல்.ஏவான இவர் நேரடியாக பாஜகவிற்கு ஆதரவளித்து வருகிறார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அவரது தொகுதி புறக்கணிக்கப்படுவதாகவும், அரசு எந்தவித நலத்திட்ட உதவிகளையும், அரசு திட்டங்களையும் செயல்படுத்த விடுவதில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இந்நிலையில் இன்று காலை தொகுதிக்கு எந்தவித திட்டங்களையும் அனுமதிக்காத முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசின் நிதி உள்ளிட்டவற்றை பாஜக துணையோடு வாங்கும் முதலமைச்சர் பாஜக இங்கு வளரக்கூடாது என்ற நோக்கத்தில், பாஜகவிற்கு ஆதரவளித்து வரும் அனைவரையும் புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக அவரின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் தொகுதி மற்றும் சட்டமன்ற உறுப்பினரை புறக்கணித்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தெரிவித்தார்.

 

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே முதலமைச்சரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.