
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக, பா.ஜ.க.வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், பதவி பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர்களாக கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் மற்றும் 49 சட்டப்பேரவை உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மற்ற மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோரும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க. தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.