
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காதது ஏன் என்று மக்களவையில் தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 2021 - 2022ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக மக்களவையில் நேற்று (10/02/2021) பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் மக்களவை உறுப்பினருமான தயாநிதிமாறன், "காங்கிரஸ் அரசு போல் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காதது ஏன்? அனைத்து விவகாரங்களிலும் காங்கிரஸ் அரசை சுட்டிக்காட்டும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காதது ஏன்" எனக் கேள்வி எழுப்பினார் மேலும், “புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்" என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.
தி.மு.க. எம்.பி.யின் கேள்விக்குப் பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்கும் திட்டமில்லை. வளர்ச்சி, நலத்திட்டங்களுக்காக பெட்ரோல், டீசல் மீதான வரியையே மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்ந்துள்ளன. சர்வதேச நிலவரங்களுக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. விலை நிர்ணய அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்குத் தரப்பட்டுள்ளதால் அதில் அரசு தலையிட முடியாது" என்றார்.