இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட் 23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனைபடைத்தது. இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வந்தது. இந்த வெற்றியை உலகமே கொண்டாடி, இந்தியாவை பலர் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில், மேற்கு வங்கம் ஜார்கிராம் மாவட்டத்தில் சஞ்சய் மஹதோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்காக நிலவில் நிலம் ஒன்றை பதிவு செய்து பரிசாக அளித்துள்ளார். இவர், திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நிலவினை கொண்டு வந்து தருவதாக உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர், "நானும் என் மனைவியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம். பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். நான் நிலவை அவளிடம் கொண்டு வருவேன் என்று முன்பு உறுதியளித்திருந்தேன். அந்த வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு நிலவில் இடம் வாங்குவதற்கான உத்வேகம் கூடியது. தற்போது திருமணமாகிய பிறகு மனைவியின் முதல் பிறந்தநாளில், ஏன் நிலவில் இடத்தை வாங்கி பரிசளிக்கக்கூடாது என்று நினைத்தேன்.
பின்னர் என் நண்பரின் உதவியுடன், லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் மூலம் நிலத்தை வாங்கினேன். நிலம் வாங்கும் வழிமுறைகள் முடிய சுமார் ஒரு வருடம் ஆனது. நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை ரூ.10,000க்கு வாங்கியுள்ளேன். அதற்கான பதிவு செய்யப்பட்ட உரிமைகோரல் பத்திரமும் கிடைத்துவிட்டது. அந்த பணத்தில் வேறு பொருள் வாங்கியிருக்க முடியும். ஆனால், நிலவு எங்கள் இருவரின் இதயங்களிலும் பிரத்யேக இடத்தை பிடித்துள்ளது. அதனால், திருமணத்திற்கு பிறகான முதல் பிறந்தநாள் என்பதால், நிலவை விட வேறொன்றை நான் சிந்திக்கவில்லை" என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சஞ்சய் நிலவில் நிலம் வாங்கியிருக்கலாம். ஆனால், நிஜத்தில் அது சாத்தியமா? தற்போது வரை விண்வெளிகளில் நிலம் வாங்குவது நடைமுறையில் சாத்தியமற்றதே. இருந்தும் சில பரிசு பொருள் விற்கும் இணையதளங்கள், நிலவில் நிலம் வாங்க விரும்புவோருக்கு 'சான்றிதழ்' வழங்கி வருகிறது. சந்திரயான்-3 வெற்றிக்கு முன்பிருந்தே இந்தியர்கள் நிலவில் நிலத்தை வாங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக, மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், 2018ல் நிலவின் தொலைதூரப் பகுதியின் மேரே மஸ்கோவியன்ஸில் நிலத்தை பதிவு செய்ததாக கூறினார்.