பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசால் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி (02.10.2023) வெளியிடப்பட்டது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 பேர் ஆவர். இவர்களில் 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் பொது பிரிவினர் (GEN) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 15.52% ஆகும். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (BC) சேர்ந்தவர்கள். இது மொத்த மக்கள் தொகையில் 27.12% ஆகும்.
மேலும் 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (EBC) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 36.01% ஆகும். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (SC) பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 19.65% ஆகும். 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் (ST) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 1.68% ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் இன்று (07.11.2023) வெளியிட்டிருந்தார். மேலும் பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 65 சதவீதமாக உயர்த்த முதல்வர் நிதிஷ்குமார் பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் பேசுகையில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டியது அவசியம். தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 20 சதவீதமாகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதமாகவும் உயர்த்த பரிந்துரை செய்கிறேன்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 43 சதவீதமாக அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு ஏழைகள் இருப்பது சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 7 சதவீத பட்டதாரிகள், ஓபிசி பிரிவில் யாதவ் உள்ளிட்ட சமூகத்தினர் ஏழைகளாக இருப்பது தெரியவந்துள்ளது” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் முதல்வர் நிதிஷ்குமாரின் பரிந்துரைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் உயர் சாதி ஏழைகளுக்கான 10 விழுக்காட்டை சேர்த்தால் பீகார் மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீடு 75 சதவீதமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.