தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அயோத்தியின் சரயு நதிக்கரையில் 6 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.
நாடு முழுவதும் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து,இனிப்புகள் பரிமாறி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், கரோனா காரணமாக சில இடங்களில் எளிய முறையில் தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், அயோத்தியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் புதிய கின்னஸ் சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசு பதவியேற்றது முதல் ஆண்டுதோறும் அயோத்தியில் தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வாறு இந்த ஆண்டு அயோத்தியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் சரயு நதிக்கரையில் 6 லட்சம் அகல் விளக்குள் ஏற்பட்டது. இது புதிய கின்னஸ் சாதனையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு, அங்குள்ள சரயு நதிக்கரையில் 4,10,000 விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டு 6 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. மேலும், அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலிலும் 21 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதனிடையே, 2021 தீபாவளி பண்டிகையின் போது 7,71,000 விளக்குகள் ஏற்றி சாதனை படைக்க உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.