இளைஞர் ஒருவரை, துணை ஆட்சியர் துரத்தி துரத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சில இளைஞர்கள் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த துணை ஆட்சியர் சிஷர் குமார் மிஸ்ரா என்பவர், இளைஞர்களுடன் பேட்மிண்டன் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், ஏற்கெனவே விளையாடி முடித்து ஏற்பட்ட சோர்வால் விளையாட முடியாது என்று இளைஞர்கள் கூறியுள்ளனர். ஆனாலும், மிஸ்ரா வற்புறுத்தியதன் பேரில், இளைஞர்கள் அவரோடு விளையாட தொடங்கியுள்ளனர்.
அந்த விளையாட்டில் துணை ஆட்சியர் சிஷர் மிஸ்ராவை, குர்மி ராஜி குமார் என்ற இளைஞர் தோற்கடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த துணை ஆட்சியர், இளைஞரை துரத்தி துரத்தி அடித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை துணை ஆட்சியர் சிஷிர் குமார் மிஸ்ரா மறுத்துள்ளார்.
துணை ஆட்சியர் தாக்கியதில் இளைஞரின் தலை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.