உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்தவர் சோகன்லால் யாதவ். இவருக்கு பெற்றோர் மூலம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, அமேதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால், திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, சோகன்லால் யாதவ் காணாமல் போனார். இதையறிந்த அவரின் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
இந்த விஷயம் அறியாத மணமகள் வீட்டார், திருமண நிகழ்ச்சிக்கு பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வந்தனர். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில், விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. இதற்கிடையில், சோகன்லால் யாதவை கண்டுபிடித்த போலீசார், மணமகளின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து காவல் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி அங்கு சென்ற மணமகளின் குடும்பத்தினருக்கு, சோகன்லால் யாதவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக தெரியவந்தது.
இருப்பினும், போலீசாரின் எச்சரித்தன் பேரில் சோகன்லால் யாதவ் திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார். அதன்படி, அதிகாலை திருமண ஊர்வலத்துடன் மணமகளின் வீட்டை அடைந்தார். சோகன்லாலுக்கு விருந்து அளித்த மணமகளின் குடும்பத்தினர், இந்த திருமணம் நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். திருமண செலவை கொடுத்த பிறகு தான் இங்கிருந்து வெளியேற முடியும் என்று சோகன்லால் யாதவை மணப்பெண்ணின் குடும்பத்தினர் பிணைக்கைதியாக வைத்துள்ளனர். இதையறிந்த போலீசார், மணமகளின் குடும்பத்தினரிடம் சமாதானம் செய்ய முற்பட்ட போதும் அவர்கள் தங்களது முடிவில் உறுதியாக உள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.