இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கும், நோயால் பாதிக்கப்பட்டு பலவீனமாக இருப்பவர்களுக்கும் அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. வீட்டிலிருந்து வெளியேறுவது தற்போதைய உடல்நிலையை மேலும் மோசமாக்கும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கும் அவர்களது வீட்டிலேயே தடுப்பூசி போடப்படும் என கேரளா அறிவித்துள்ளது.
அவ்வாறு வீட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து, அடுத்த 48 மணிநேரத்திற்கு தொலைபேசி வாயிலாக விசாரிக்கப்படும் என்றும், அவசரமென்றால் தொடர்புகொள்ள அவர்களுக்கு தொலைபேசி எண் தரப்படும் என்றும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வீட்டிலேயே தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை நோய்த்தடுப்பு குழு மூன்று வாரங்களுக்கு கண்காணிக்கும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. அதேபோல, 18-45 வயது வரை உள்ள வழக்கறிஞர்களையும், தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டியவர்கள் பட்டியலில் அம்மாநில அரசு சேர்த்துள்ளது.