மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கும் முன்னுதாரன மாதிரி நிறுவனம் என்ற தகுதியின் கீழ் 2024-ம் ஆண்டுக்கான ஹெலன்கெல்லர் விருது ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்திற்கு கிடைத்தது.
இந்த விருது வழங்கும் விழா புதுதில்லி அரசியலமைப்பு சட்ட அரங்கில் நடைபெற்றது.விழாவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிக்கான அதிகாரம் அளித்தல் துறையின் செயலாளர் டாக்டர்.ராஜேஷ் அகர்வால் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான தேசிய மையத்தின் தலைவர் பிரதீப் குப்தா ஆகியோர் இணைந்து விருதை வழங்கினார்கள்.
சக்தி மசாலா நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் .பி.சி.துரைசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார். இன்டர்நேஷனல் ஹப்ஸ் நிறுவத்தின் கலாச்சாரா முன்னோடி துறையின் இயக்குநர் ஷீதல் பாதி உடனிருந்தார். விருது பெற்ற, சக்தி மசாலா குழுமத்தின் நிறுவனர் பி.சி. துரைசாமிக்கு, இந்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் (சி.பி.ஐ) டி.ஆர்.கார்த்திகேயன், தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனர் - தலைவர் கே வி கே பெருமாள், செயலாளர் எஸ். பி. முத்துவேல் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்திய அளவில் உணவுப் பொருட்களான மசாலா பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்கி, அவர்களின் வாழ்வில் நம்பிக்கையும்,பொருளாதார ரீதியாக மேம்பாட்டையும், சுயமாக வாழும் திறனையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.