மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்களின் பதவிக்கான சீட்டுகள் உள்ளன. இதில், 238 எம்.பிக்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். மீதமுள்ள 12 எம்.பி.க்கள், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ அல்லது ஜனாதிபதியால் நேரடியாகவோ நியமிக்கப்படுவார்கள். இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பாகப் பங்களிப்பு வழங்கியவர்களுக்கு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நியமன எம்.பி பதவி வழங்கப்படும்.
அந்த வகையில், தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தியை மாநிலங்களவை எம்.பியாக ஜனாதிபதி திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதா மூர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியக் குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரை செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கிறது. மாநிலங்களவையில் அவரது இருப்பு நமது ‘மகளிர் சக்தி’க்கு ஒரு சக்தி வாய்ந்த சான்றாகும். இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறது. அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
1950 ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் பிறந்த சுதா மூர்த்தி, எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகங்களைக் கொண்டவர். எழுத்துத் துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி கடந்த 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டில், சுதா மூர்த்திக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையில் முன்னாள் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த சுதா மூர்த்தி, உலக பணக்காரரான பில்கேட்ஸ் அறக்கட்டளையின் பொது சுகாதாரத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். சுதா மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.