இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதேநேரத்தில் நாளை (14.04.2021) மாநில/ யூனியன் பிரதேச ஆளுநர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளார் என மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியாவில் தினசரி கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 736 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 879 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா, கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாமிடத்திலும், அதிக அளவிலான சிகிச்சை பெரும் கரோனா பாதிக்கப்பட்டோர் உள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாமிடத்திலும் உள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 51 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதியானது. உத்தரப்பிரதேசத்தில் 13,685 பேருக்கும், டெல்லியில் 11,491 பேருக்கும் நேற்று ஒரேநாளில் கரோனா உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் நான்காவது அலை ஏற்பட்டிருப்பதாக டெல்லி முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.