75வது சுதந்திர தினத்தையொட்டி, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (14/08/2022) இரவு 07.00 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது குடியரசுத் தலைவர் கூறியதாவது, "இந்த அற்புதமான நாளில் உங்களிடம் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நாட்டிற்காக தியாகம் செய்த அத்தனை சுதந்திர போராட்ட வீரர்களையும் நான் நினைவுக் கூர்கிறேன். இந்திய சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு அளப்பரியது.
நமது மூவண்ண தேசியக் கொடி நாடு முழுவதும் பெருமையுடன் ஒவ்வொருவரின் வீட்டிலும் பறக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த பழங்குடியினர், நாட்டின் பெருமையின் அடையாளங்களாக இருக்கின்றனர். இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே பெண்களுக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தியா ஒருபோதும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை மறக்காது.
2047- ஆம் ஆண்டு நமது அத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கியிருக்க வேண்டும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக் கொண்டு மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை செய்து காட்டி இருக்கிறோம். 200 கோடி தடுப்பூசிச் செலுத்தி வளர்ந்த உலக நாடுகளை விட பல படி முன்னோக்கி சென்று இருக்கிறோம்.
கரோனா தொற்றின் காரணமாக, உலக நாடுகள் பலவும் பொருளாதார பிரச்சனைகளை சந்தித்த போது, இந்தியா அதில் இருந்து விரைவில் மீண்டது. மீண்டு வரும் நமது பொருளாதாரம், ஏழைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பேருதவியாக இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பொருளாதார நிலையை உணர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நல்லாட்சிக்கான மாற்றங்கள். புதிய இந்தியாவின் தன்னம்பிக்கைகளாக இளைஞர்கள், விவசாயிகள், குறிப்பாக பெண்கள் இருக்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.