பஞ்சாபில் ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்ய நேரிடும் என முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அங்கு முதல்வராக இருக்கும் பகவந்த் சிங் மானுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே சட்டப் பேரவையைக் கூட்டுதல், பல்கலை. வேந்தர் பதவி உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் முதல்வர் பகவந்த் சிங் மானுக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதற்கு பகவந்த் சிங் எந்த விதப் பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் ஆளுநர் பன்வாரிலால், மாநில சட்ட ஒழுங்கு குறித்து நான் எழுதும் கடிதங்களுக்குப் பதிலளிக்க வேண்டும். அப்படி பதில் அளிக்காவிட்டால் அரசியல் அமைப்பு சட்ட நடவடிக்கையைச் சீர்குலைத்துவிட்டதாகக் கூறி ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்ய நேரிடும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.