மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அந்தவகையில் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள கோவாவில் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடக்கு கோவாவில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் விஷ்வஜித் ரானே பங்கேற்ற பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக அமைச்சரிடம் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் "நீங்கள் வாக்களித்தது போல வேலைவாய்ப்புகளை வழக்கவில்லையே" என கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து கூட்டம் முடிந்தவுடன் அந்த நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக சார்பில் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள கோவா மாநில காங்கிரஸ், "ஆளும் அரசு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தனக்காக வேலைபார்க்க வைத்தால் இப்படித்தான் நடக்கும். இது கண்டனத்துக்குரியது'' என தெரிவித்துள்ளது.