டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 ஆம் தேதி டெல்லியில் பல இடங்களில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து காற்று மாசு காரணமாக டெல்லியில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. டெல்லியில் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக அங்குள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது. தேவையற்ற கட்டட வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லியில் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் மக்கள் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளதால் வரும் 10 ஆம் தேதி வரை (10.11.2023) தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.