மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணி, சிங்கு எல்லையில் கலவரம் ஆகியவற்றைத் தாண்டி விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை, வீடு திரும்ப் போவதில்லை என்ற முடிவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சர்ஜி, டெல்லியின் காசிப்பூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து, விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், “நீங்கள் போராடுவதற்கான காரணத்தில் நிறைய உண்மை இருக்கிறது. நான் சத்தியத்துடன் இருக்கிறேன்; எப்போதும் அதனுடன் நிற்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் நடந்த இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று (14.02.2021) கடைபிடிக்கப்பட்டது. அதனையொட்டி, போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அத்தாக்குதலில் வீரமரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி, பேரணியாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.