Van overturned in river accident in uttarkhand

உத்தரகாண்ட் மாநில, ருத்ரபிரயாக் மாவட்டத்தில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. 23 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த வேன், ரைடோலி அருகே ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Advertisment

இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் மற்றும் மீட்புக் குழுவினருக்குத்தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மீட்பு குழுவினர், பள்ளத்தாக்கில் விழுந்த வேனில் இருந்தவர்களை மீட்க முயற்சி செய்தனர். அதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதில் படுகாயமடைந்த மற்றவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த்னார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ‘ருத்ரபிரயாக் மாவட்டத்தில் வேன் விபத்துக்குள்ளானதாக வந்த செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது. மீட்பு குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை அளிக்க வேண்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.