புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கில், தலைமைச் செயலாளர் அஸ்வினிகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதுச்சேரியில் நடைபெறும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்களுக்கான திட்டங்கள் தங்கு தடையின்றி நடைபெறுகிறதா என்று அதிகாரிகளுடன் ஆலோசித்தோம். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், காவிரி தண்ணீர் பெறுவது, மணல் விவகாரம், காசநோய் மற்றும் தொழு நோயாளிகளுக்கான சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பிரதமருக்குப் புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் தடுப்பூசி செலுத்தியது பெருமைப்படக்கூடிய விஷயம்.
ஆகவே அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். நோய்தொற்றின் தாக்கம் அதிகரித்தால் அதிலிருந்து காத்துக்கொள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். குடியரசுத் தலைவர் ஆட்சியில் உள்ள நடைமுறைகள் அனைத்தும் செயல்படுத்தப்படும். அதன்படி புதுச்சேரிக்கான நிதி மேலாண்மை நன்றாகச் செயல்படும்” என்று கூறிய அவரிடம் ‘தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது சட்டமன்ற வளாகத்தில் ஏன் கூட்டம் நடத்தப்பட்டது?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “மக்கள் பணிகளை நிர்வாகம் செய்யும் இடம் பேரவை என்பதால், அந்த இடத்தில் இருந்து மக்களுக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது” என்று தமிழிசை தெரிவித்தார்.
மேலும் “குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படும். குழந்தைகளுக்கு காலை வழங்கப்படும் பால், நாளை முதல் வழங்கப்படும். 9, 10 மற்றும் 11 வகுப்புகளுக்கு தேர்தலுக்குப் பின்பு தேர்வுகளை ஒத்திவைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது” என்றும் கூறினார்.