பஞ்சாப் மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றி அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு அலுவலகங்களின் நேரம் அனைத்து மாநிலங்களிலும் ஏறத்தாழ காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை இருக்கும் சூழலில் பஞ்சாப் அரசு அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை காலை 7.30 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை செயல்படும் நேரமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த்மான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, பஞ்சாப் மாநிலத்தில் பிற்பகல் 1.30 மணியில் இருந்து மின் நுகர்வு அதிகரிக்கிறது. அதாவது பீக் லோட் பிற்பகல் 1.30 மணிக்கு மேல் துவங்கும். எனவே அரசு அலுவலகங்கள் பிற்பகல் 2 மணியளவில் மூடப்பட்டால் மின்சாரம் பயன்பாடு 300 முதல் 350 மெகாவாட் வரை குறைக்க முடியும்.
இந்த முடிவு மக்களுக்கு பயன் அளிக்கும். மேலும் அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்திற்கு பின் பிற நிகழ்ச்சிகளிலும் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியும் என்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் கூறியுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு வரும் மே 2 ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டிற்கு வரும் எனவும் ஜூன் 15 வரை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.