இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31.01.2025) காலை 11 மணிக்குத் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. முன்னதாக பாரம்பரிய முறைப்படி, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து சாரட் வண்டியில் நாடாளுமன்றத்திற்குக் குடியரசுத் தலைவர் வருகை வந்தார்.
அவரைப் பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தங்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர். மேலும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு நாடாளுமன்ற ஊழியர்கள் செங்கோலை ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இதனையடுத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். அதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 % இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நாளை (01.02.2025) காலை 11 மணிக்கு மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.