உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி ஒருவர். இவர் தனது ஆண் நண்பருடன் பேசியிருக்கிறார். இது சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவர அவரது தந்தை சிறுமியைத் திட்டியுள்ளார். அத்துடன் உடனடியாக சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள சிறுமிக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாததால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை சிறுமியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று தந்தை சிறுமியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். சிறுமியின் தந்தை தனது நண்பர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், குருகிராம் செல்லும் வழியில் யமுனை ஆற்றின் மிதவை பாலத்தில் மூவரும் வந்துகொண்டிருந்த போது, தந்தை சிறுமியின் கழுத்தைத் துணியால் நெரித்துள்ளார். பின்பு அவரும் அவரது நண்பரும் சேர்ந்து சிறுமியை ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். ஆற்றில் அடித்துக்கொண்டு போன சிறுமியின் கதறல் கேட்டு ஆற்றுப்படுகையில் உள்ள மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் புகாரின் பேரில் சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர் இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குழந்தைகள் நல அதிகாரிகளிடம் சிறுமி தனக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறியுள்ளார். பின்னர், சிறுமி பாதுகாப்பாகக் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.