Skip to main content

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய எம்.பி க்களின் காஷ்மீர் வருகை...

Published on 30/10/2019 | Edited on 30/10/2019

ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்கள் குழு இந்தியா வந்துள்ள நிலையில், அவர்கள் காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நிலவும் அரசியல் சூழல் குறித்தும் ஆய்வு செய்தனர். இந்தநிலையில் அவர்களின் இந்த வருகை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

eu delegation controversy

 

 

ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்களின் வருகையை மத்திய வெளியுறுவுத் துறை ஏற்பாடு செய்யவில்லை என்று வெளியுறுவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறிய நிலையில், இந்த வருகையை ஏற்பாடு செய்தது தனியார் தொண்டு நிறுவன பெண் என்பது தெரியவந்துள்ளது. இந்த சந்திப்புக்காக அந்த பெண் 30 ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலை 'தி இந்து' பத்திரிகை வெளியிட்டுள்ளது. மேலும், அந்த பெண் அரசு அமைப்பு எதிலும் பணியிலோ அல்லது பொறுப்பிலோ இல்லை எனவும் கூறப்படுகிறது. 

அதில், "நான் இந்திய பிரதமர் மோடியுடன் உங்களுக்கு ஒரு முக்கியமான சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி தற்போது இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றியை பெற்று உள்ளார். அத்துடன் அவர் தனது வளர்ச்சி சார்ந்த திட்டங்களை மீண்டும் தொடர உள்ளார். இதன் காரணமாக அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் வலிமையான தலைவர்களான உங்களை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆகவே இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சந்திப்பின் போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

30 எம்.பிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 3 எம்.பி க்கள் இந்த அழைப்பை நிராகரித்துள்ளனர். பாதுகாப்பில்லாமல் சாதாரண சூழலில் மக்களை சந்தித்து பேச வேண்டும் என்றும், ஊடகங்களுடன் சுதந்திரமாக பேச வேண்டும் என்றும் அந்த 3 பேரும் கூறியதாகவும், அது ஏற்றுக்கொள்ளப்படாததால் அவர்கள் இந்த பயணத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், இந்த பயணத்தை ஏற்பாடு செய்த மாடி சர்மா என்ற அந்த பெண்ணின் ட்விட்டர் பக்கத்தில், அவர் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் என்றும், அவர் ஒரு சர்வதேச தொழில் தரகர் என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இந்திய தலைவர்களையே காஷ்மீருக்குள் சுதந்திரமாக அனுமதிக்காத மத்திய அரசு, ஐரோப்பிய எம்.பி க்களை மட்டும் அனுமதித்துள்ளளது ஏன் என பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்