கேரளாவில் நடைமேடையில் உள்ள கடைகளை அதிகாரிகள் அகற்ற முயன்ற போது பெண் ஒருவர் அதிகாரிகள் மீது கொதிக்கக் கொதிக்க பாலை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் செங்கனூர் என்ற பகுதியில் உள்ள சிறிய நகரில் வெல்லவூர் ஜங்சன் எனும் பகுதியில் நடைமேடை பகுதியில் பெண் ஒருவர் டீக்கடை நடத்தி வந்துள்ளார். அந்த டீக்கடையால் பொதுமக்கள் நடப்பதற்கு சிரமம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் அரசு ஊழியர்களும், போலீசாரும் அந்த கடைக்கு வந்தனர். கடையில் இருந்த பொருட்களை எடுத்து அகற்ற முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஆவேசமாக கத்தினார். கடையில் இருந்த மற்றொரு பெண்ணும் எதிர்ப்பு தெரிவித்தார். முன்னரே சொல்லியிருந்தால் நாங்களே காலி செய்திருப்போம் என தெரிவித்தனர். முன்பே நோட்டீஸ் அனுப்பியிருந்தால் நாங்களே கடையை காலி செய்திருப்போம் என கதறினர்.
இதனால் அந்த சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் கடையை காலி செய்வதிலேயே குறியாக பொருட்களை எடுக்க முயன்றனர். இதுவரை அழுது கதறிய பெண்கள் ஒருகட்டத்தில் ஆத்திரமடையத் தொடங்கினர். அவர்களது ஆத்திரத்தையும் பொருட்படுத்தாமல் பொருட்களை ஊழியர்கள் எடுத்துக்கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத விதமாக கடையில் டீக்காக கொதித்துக் கொண்டிருந்த பாலை சடார் என அந்த ஊழியர்கள் மற்றும் காவலர்கள் குழுவின் மீது வீசினர். இதனால் அனைவரும் அலறியடித்து ஓடினர். மேலும் கடையில் வடைக்காக கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய்யை எடுத்து ஊற்ற முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.