நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று காலை திடீரென பாஜக ஆட்சியமைத்தது.
மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், “பாஜகவுடன் கூட்டணி என்பது, அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை. அதேபோல அஜித்பவாரின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை" என தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மகாராஷ்டிரா அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், 2-வது முறையாக முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருந்த தனது வாழ்த்து செய்தியில், “முதல்வராக பதவிஏற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கும், துணை முதல்வராக பதவி ஏற்ற அஜித் பவாருக்கும் எனது வாழ்த்துக்கள். மகாராஷ்டிாவின் ஒளியமயமான எதிர்காலத்துக்கு இவர்கள் சேர்ந்து உழைப்பார்கள் உறுதியாக நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதற்கு தேவேந்திர பட்னாவிஸ் தற்போது நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி மகாராஷ்டிாரவை மிகச்சிறந்த மாநிலமாக உருவாக்குவோம், புதிய உச்சத்தை தொடுவோம்’’ எனக் கூறியுள்ளார்.