மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தனர். கூட்டணி அரசு இரண்டரை ஆண்டுகளைக் கடந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார். 35க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் சொகுசு விடுதியில் முகாமிட்டு கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே முதல்வர் பொறுப்பிலிருந்து உத்தவ் தாக்கரே விலகிய நிலையில் பாஜக மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் புதிய முதல்வராக அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே இன்று பொறுப்பேற்க உள்ளதாக பாஜக மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான பட்னாவிஸ் இன்று மாலை அறிவித்தார். மேலும் பேசிய அவர், இந்த அரசில் எந்த ஒரு அமைச்சர் பொறுப்பையும் ஏற்க மாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்த 60 நிமிடத்தில் திடீர் திருப்பமாக புதிய அரசில் அவர் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய பாஜக தலைவர் நட்டா, " மகாராஷ்டிரா அரசில் தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்க வேண்டும் என பாஜக மத்திய தலைமை முடிவு செய்துள்ளது; துணை முதலமைச்சராக அவர் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இதனால் இன்று இரவு அவர் துணை முதல்வராகப் பொறுப்பேற்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.