இந்தியாவில் கோவாகக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகளை செலுத்தும்போது ஏற்படும் காய்ச்சல் போன்ற பக்க விளைவுகளுக்காக மாத்திரைகளும் வழங்கபட்டு வருகின்றன. இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள், பாராசிட்டமால் மாத்திரையையோ அல்லது வலி நிவாரணியையோ எடுத்துக்கொள்ள தேவையில்லை என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; சில தடுப்பூசி மையங்கள், குழந்தைகளுக்கு கோவாக்சினுடன் சேர்த்து மூன்று 500 மி.கி பாராசிட்டமால் மாத்திரைகளை பரிந்துரைக்கின்றன என்று அறிந்தோம். கோவாக்சின் தடுப்பூசி போட்ட பிறகு பாராசிட்டமாலோ அல்லது வலி நிவாரணிகளோ எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கபடுவதில்லை.
30,000 பேரிடம் நடத்தப்பட்ட கோவாக்சின் பரிசோதனையில், 10 முதல் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டது. அந்த பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை லேசானவை. அந்த பக்க விளைவுகள் ஒன்றிண்டு நாட்களில் சரியாகிவிட்டது. அந்த பக்க விளைவுகளை சரி செய்ய தனியாக எந்த மருந்தும் தேவைப்படவில்லை.
கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள், மருத்துவருடன் கலந்தாலோசித்த பின்னரே (காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகளுக்கான) மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. மற்ற கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.