லல்லு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப்புக்கும், ஐஸ்வர்யாராய் என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 6 மாதத்திலேயே தங்கள் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு எழுந்ததால் தேஜ் பிரதாப் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. எனினும் தேஜின் மனைவி ஐஸ்வர்யா தற்போது லல்லுவின் வீட்டில் தான் தங்கி இருக்கிறார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென நிருபர்களை அழைத்த ஐஸ்வர்யா தனது மாமியார் ராப்ரி தேவி, லாலுவின் மகள் மிசா பாரதி மீது புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " எனது கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தாலும், இந்த வீட்டில் இன்னும் நான் வசித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் எனது மாமியாரும், நாத்தனாரும் என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து எனக்கு சரியாக சாப்பாடு போடுவதில்லை.நேற்று மாலையில் இருந்து எனக்கு சுத்தமாக சாப்பாடு தரவில்லை. சமையல் கூடத்தை பூட்டி வைத்துவிட்டனர். இதனால் தண்ணீர் குடிக்க,சாப்பிட முடியவில்லை. சாவி எங்கிருக்கிறது என கேட்டதற்கு என்னை அடித்தார்கள்.எனது போனையும் பறிக்க முயன்றனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார்கள்" என்றார்.